ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அதிரடி கருத்து: அதிமுக தலைவர்கள் ஆவேசம்


ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அதிரடி கருத்து: அதிமுக தலைவர்கள் ஆவேசம்
x

ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தால் அதிமுக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தால் அதிமுக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. அண்ணாமலை மீது அவரது கட்சியினரே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். திமுகவின் 'பி' டீமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.ரவுடிகள், பண மோசடி செய்தவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியுள்ளார் அண்ணாமலை. ஊழல் காரணமாக கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்தது. கவுன்சிலராகக்கூட அண்ணாமலை இருந்ததில்லை என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறினார்.

சென்னையில் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாஜகவில் மாநில தலைவர் பதவி என்பது பொம்மை பதவி. பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம், கோமாளியாகவும் வைக்க முடியும். பாஜக மாநில தலைமை கட்டுக்கோப்பு இல்லாமல் உள்ளது.பாஜகவில் அகில இந்திய தலைமைக்கு தான் அதிகாரம் உள்ளது.அண்ணாமலையின் பேச்சு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியவர்களை சும்மா விடமாட்டோம் என்றார்.

ஜெயலலிதா குறித்து இழிவாக பேசுவது ஆண்டவனாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டும் தான் கூட்டணி - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா ஏராளமான சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதாவின் சாதனைகளை பொறுக்க முடியாமல் சிலர் காழ்ப்புணர்ச்சியில் பேசுகின்றனர். 1996 ஆம் ஆண்டு மட்டும் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் போட்டனர். அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார் ஜெயலலிதா பற்றி அறியாமல் அண்ணாமலை பேசுகிறார் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

ஜெயலலிதாவை விமர்சித்ததை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அண்ணா மலையை கண்டிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்து வருகிறோம்.

கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறும்போது, கூட்டணி தொடர்கிறதா? இல்லையா? என்ற கேள்வி நிச்சயமாக எழும். இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் தான்.

மாநில தலைவர் என்ற பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதனால்தான் வாய்க்கு வந்தப்படி அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி தொடரக்கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த கூட்டணி தொடரக்கூடாது, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வரக்கூடாது என்ற நிலையில்தான் அண்ணாமலை இருக்கிறாரா? ஏனெனில் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது. அண்ணாமலை அ.தி .மு.க.வை பற்றி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. என்பது ஆலமரம். பா.ஜ.க. என்பது செடி. சட்டசபையில் 4 இடங்களை பா.ஜ.க. பிடித்ததற்கு, அ.தி.மு.க.தான் காரணம். அ.தி.மு.க.வுடன் இருந்தால்தான், பா.ஜ.க.வுக்கு பலம் என ஜெயக்குமார் கூறினார்.

அகில உலகத்தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அ.தி.மு.க. ஆட்சியை பற்றியும் தரக்குறைவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்-அமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த பேச்சு தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். அண்ணாமலைக்கு எதிராகவும், ஈபிஎஸ்க்கு ஆதரவாகவும் அதிமுகவினர் முழக்கம் எழுப்புவதால் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story