உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுப்பதால் விபத்தில் சிக்கும் விலங்குகள்


உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுப்பதால் விபத்தில் சிக்கும் விலங்குகள்
x
தினத்தந்தி 29 April 2023 6:45 PM GMT (Updated: 29 April 2023 6:45 PM GMT)

உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுப்பதால் விலங்குகள் விபத்தில் சிக்குகிறது. காப்புக்காட்டிலேயே பழமரங்கள், தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று கோாிக்கை எழுகிறது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் பகுதியில் சிறுநாகலூர், கொட்டையூர், குடியநல்லூர், தியாகை, நின்னையூர், கூத்தக்குடி, வரஞ்சரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஆழ்வார் மலை காப்புக்காடு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கூத்தக்குடி காப்புக்காடு 7 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறையினர் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மயில்கள், மலை பாம்புகள் மற்றும் வன விலங்குகள் உள்ளன. மழைக்காலத்தில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு கிடைக்கிறது.

தண்ணீர், உணவு தேடி வருகிறது

ஆனால் கோடை காலத்தில் வன விலங்குகளின் நிலையோ பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன.

அவ்வாறு வரும் காட்டுப்பன்றிகள், குரங்குகள், முயல்கள், மான்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் கிடைக்கிறது.

இதனால் அவை மீண்டும் காட்டுப்பகுதிக்கு செல்லாமல் வயல் பகுதிகளிலேயே தங்கி, நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

தண்ணீர் தொட்டி தேவை

சிறுநாகலூர், குடியநல்லூர், தியாகை, கூத்தக்குடி ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட விலங்குகள் கடந்து செல்வதை காணமுடிகிறது. அவ்வாறு செல்லும்போது வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.

எனவே வனவிலங்குகளுக்காக வனப்பகுதியின் நடுவில் செயற்கை வனப்பகுதி அமைத்து, அதில் வனவிலங்குகளுக்கு தேவையான பழவகை மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கீடு செய்யவேண்டும். அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைந்து தர வேண்டும். மேலும் இந்த தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பினால் மட்டுமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

சாலையை கடக்கும்போது விபத்து

சிறுவல் கிராமத்தை சேர்ந்த தனவேல்:-

தியாகதுருகம் பகுதியில் தியாகை, சிறுநாகலூர், குடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியின் நடுவே சாலைகள் செல்கின்றன. இந்த சாலைகளில் இரவு நேரங்களில் செல்லும்போது மான் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையை திடீரென கடந்து செல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மான்கள் மீது மோதி நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. இவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது மான் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதேபோல் தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி மான்கள் அவ்வப்போது இறந்து போகின்றன. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து மான்கள் தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலி அமைக்க வேண்டும்

வரஞ்சரம் கிராமத்தை சேர்ந்த மகுட துரை:-

எங்களது கிராமத்தையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. வறட்சி காலங்களில் அவ்வப்போது மான்களும், மான் குட்டிகளும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வந்து செல்லும். இவ்வாறு வந்து செல்லும் மான்களை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. இதனால் கடந்தாண்டு 2 மான்கள் இறந்து போன சம்பவங்களும், வீடுகளில் தஞ்சமடைந்த மான்களை வனத்துறையிடம் ஒப்படைத்த சம்பவங்களும் இந்த பகுதியில் நடந்துள்ளது. எனவே வனப்பகுதியில் இருந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் வேலி அமைக்க வேண்டும். மேலும் சமூக விரோதிகள் வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் வரஞ்சரம் பகுதியில் முகாம் அலுவலகம் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்.


Next Story