நாகர்கோவிலில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி:விலங்குகள் 40 சதவீத பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுகின்றனகலெக்டர் ஸ்ரீதர் அதிர்ச்சி தகவல்


நாகர்கோவிலில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி:விலங்குகள் 40 சதவீத பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுகின்றனகலெக்டர் ஸ்ரீதர் அதிர்ச்சி தகவல்
x

விலங்குகள், பறவைகள் 40 சதவீத பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுவதாக நாகர்கோவிலில் நடந்த மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

விலங்குகள், பறவைகள் 40 சதவீத பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுவதாக நாகர்கோவிலில் நடந்த மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீண்டும் மஞ்சப்பை தொடர் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சுமார் 2,500 மாணவிகள் பங்கேற்று மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகள், சுற்றத்தார், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துக்கூற வேண்டும். தற்போதைய சூழலில் விலங்குகள், பறவைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன் தாக்கத்தை அனைவரும் புரிந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும்.

ஒலி மாசு கட்டுப்பாடு

ஒலி அதிகம் எழுப்பும் வாகனங்களை ஆய்வு செய்து ஒலி மாசுக் கட்டுப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக உரம் தயாரிப்பது, நீர் நிலைகள், கால்வாய்களை தூர்வாரி நீர் மாசுபாடு கட்டுப்பாடு, தொழிற்சாலைகள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை அந்த நிறுவனங்கள் சேகரித்து அதனை மறுசுழற்சி வாயிலாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு வாரமும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை போன்று குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாகவும், பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாகவும் மாற்ற நடைெபறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருது

தொடர்ந்து மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர் சங்கிலி நடத்தியதற்காக இந்திய உலக சாதனை அமைப்பால் வழங்கப்பட்ட உலக சாதனை விருதை ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சகாய செல்விக்கு கலெக்டா் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, கல்லூரி செயலாளர் கில்டா, துணை முதல்வர் லீமா ரோஸ், திருப்புமுனை இயக்குனர் நெல்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story