ஊஞ்சலூர் அருகே மீண்டும் சம்பவம் பட்டிக்குள் புகுந்து ஆடு-கோழிகளை கடித்து கொன்ற நாய்கள்


ஊஞ்சலூர் அருகே பட்டிக்குள் புகுந்து ஆடு, கோழிகளை கடித்து கொன்ற நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே பட்டிக்குள் புகுந்து ஆடு, கோழிகளை கடித்து கொன்ற நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மீண்டும் சம்பவம்

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இரவு நேரத்தில் ஆட்டுப் பட்டிக்குள் நாய்கள் கூட்டமாக புகுந்து ஆடுகளையும், கோழிகளையும் கொன்று குவித்தன.

இதை தடுக்கும் வகையில் கொடுமுடி தாசில்தார் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இரவு நேரத்தில் கண்காணித்து வந்தனர். எனினும் நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மீண்டும் நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடு, கோழிகளை கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆடு-கோழிகள் இறந்து கிடந்தன

வெங்கம்பூர் அருகே உள்ள கல்வெட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகனமூர்த்தி. இவர் வீட்டு முன்பு பட்டி அமைத்து அதில் ஆடு, கோழிகளை அடைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் தூங்க சென்றுவிட்டார். இந்த நிலையில் 2 மணி அளவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே சத்தம் கேட்டு மோகனமூர்த்தி மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தார்கள்.

பின்னர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது மோகனமூர்த்தியின் பட்டிக்குள் இருந்து கும்பலாக நாய்கள் ஓடின. உடனே பட்டிக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஒரு செம்மறி ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 3 கோழிகளும் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

நாய்கள் கொன்றன

பட்டிக்குள் கும்பலாக புகுந்த நாய்கள் செம்மறி ஆட்டையும், கோழிகளையும் கடித்து குதறி கொன்றுவிட்டு சென்றது தெரிய வந்தது. பின்னர் இதுபற்றி கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கரட்டாம்பாளையம் கால்நடை டாக்டர் ஜெயலட்சுமி அங்கு சென்று இறந்த ஆடு, கோழிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தார்.

ஆடு, கோழிகளை கொன்ற நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story