ஊஞ்சலூர் அருகே மீண்டும் மர்ம விலங்கு அட்டகாசம் கவுன்சிலர் வீட்டு பட்டியில் ஆடு- 2 கோழிகளை வேட்டையாடியது; கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை


ஊஞ்சலூர் அருகே மீண்டும் மர்ம விலங்கு அட்டகாசம் கவுன்சிலர் வீட்டு பட்டியில் ஆடு- 2 கோழிகளை வேட்டையாடியது; கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
x

ஊஞ்சலுர் அருகே மீண்டும் மர்ம விலங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளது. கவுன்சிலர் வீட்டு பட்டியில் ஆடு, 2 கோழிகளை வேட்டையாடி உள்ளது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலுர் அருகே மீண்டும் மர்ம விலங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளது. கவுன்சிலர் வீட்டு பட்டியில் ஆடு, 2 கோழிகளை வேட்டையாடி உள்ளது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கறுப்புநிற மர்ம விலங்கு

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வெங்கம்பூர் கம்மங்காட்டு களம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 60) இவருடைய மனைவி மரகதம் (55). இவர் வெங்கம்பூர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் தன்னுடைய வீட்டின் அருகிலேயே பட்டி அமைத்து, 15 ஆடுகள், 2 மாடுகள், 10-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்து வருகிறார். பட்டியை சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு உள்ளது. 2 பெரிய ஆடுகள் தவிர சிறிய குட்டிகளை கம்பி வேலி போட்ட கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2½ மணி அளவில் பட்டியில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் மரகதமும், அவருடைய தம்பி மகன் பிரசாத் (19) என்பவரும் வௌியே வந்து பட்டியை நோக்கி சென்றார்கள். அப்போது சுமார் 1½ அடி உயரத்தில் கறுப்பு நிறமுள்ள மர்ம விலங்கு ஒன்று பட்டியில் இருந்து பாய்ந்து வெளியே ஓடியது.

செத்துக்கிடந்தன...

மர்ம விலங்கை பார்த்து அதிர்ந்துபோன மரகதமும், பிரசாத்தும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்கள். அதன்பின்னர் பட்டிக்குள் சென்று பார்த்தார்கள். அங்கு ஒரு ஆடும், 2 கோழிகளும் கடித்து குதறப்பட்டு செத்துக்கிடந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று காலை வனத்துறைக்கும், வருவாய்த்துறை அதிகாரிக்கும் தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் வெங்கம்பூர் வனக்காவலர் கீர்த்தனா சம்பவ இடத்தை பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்.

இதற்கிடையே கரட்டாம்பாளையம் கால்நடை டாக்டர் ஜெயலட்சுமி சம்பவ இடத்துக்கு வந்து ஆடு, கோழிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

செந்நாயா?

கடந்த 3 நாட்களுக்கு முன் வெங்கம்பூர் அருகே உள்ள கல்வெட்டுபாளையத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான பட்டியில் 8 ஆடுகள், 3 கோழிகளை மர்மவிலங்கு கொன்றது. பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு கம்மங்காட்டுகளத்தில் கணபதி என்பவருக்கு சொந்தமான பட்டிக்குள் புகுந்து வேட்டையாடி உள்ளது.

ஆடு, கோழிகளை கொல்லும் மர்ம விலங்கு இறைச்சியை தின்பதில்லை. ரத்தத்தை மட்டும் குடித்து விட்டு செல்கிறது. அதனால் அது செந்நாயாக இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள். அடுத்தடுத்த கிராமங்களில் நடந்த இந்த சம்பவம் கால்நடை வளர்ப்பவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அதனால் ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, கால்நடைகளை கொல்லும் மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story