திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையுடன் போதையில் தள்ளாடிய தாய் - மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்


திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையுடன் போதையில் தள்ளாடிய தாய் - மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்
x

போதையில் தள்ளாடிய பெண்ணிடம் இருந்த குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தினத்தந்தி 17 Sep 2022 4:09 AM GMT (Updated: 17 Sep 2022 4:10 AM GMT)

திண்டுக்கல் அருகே மது குடித்த பெண் பச்சிளம் குழந்தையுடன் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஒரு பெண், கையில் பச்சிளம் ஆண் குழந்தையுடன் தள்ளாடியபடி வந்தார். பின்னர் மதுரை பஸ்கள் நிற்கும் பகுதிக்கு வந்த அவர் அங்கேயே அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் குழந்தை அழ தொடங்கியது. ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த பெண்ணால், குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. மேலும் அவர் கையில் மதுபாட்டில் வைத்திருந்தாக தெரிகிறது.

இதனால் குழந்தைக்கு மதுவை கொடுத்து விடுவாரோ? என்று சக பயணிகள் சந்தேகம் அடைந்தனர். அதுபற்றி திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜபெருமாள், லதா, ஏட்டு சீனிவாசபெருமாள் ஆகியோர் விரைந்து சென்றனர். அந்த போதை பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால் போதையில் இருந்த அந்த பெண் குழந்தையை கொடுக்க மறுத்தார்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் போலீசார் குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு பரிசோதனையில் குழந்தைக்கு மது கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் அந்த பெண் போதையில் இருந்ததால் அவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது அவரிடம் இருந்து 2 மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அந்த பெண் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் என்பதும், கணவருடன் கோபித்து கொண்டு மது குடித்ததும் தெரியவந்தது. இதற்கிடையே சிகிச்சையில் இருந்த பெண் திடீரென மாயமாகிவிட்டார். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.




Next Story