ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல் - 6 பேர் கைது


ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல் - 6 பேர் கைது
x

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிசை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

அரியவகை உயிரினமான ஸ்பேம் திமிங்கலத்தின் உமிழ்நீரில்(அம்பர் கிரிஸ்) இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி மருத்துவத்துறையில் பல்வேறு மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட அம்பர்கிரிசின் தேவை உலகம் முழுவதும் அதிகமாக இருப்பதால் சர்வதேச சந்தையில் இதற்கு அதிக மதிப்பு உண்டு. இதனை கடத்தி கள்ளச்சந்தையில் விற்று கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் கும்பலும் உள்ளன.

ரகசிய தகவல்

இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயில் மூலம் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி கடத்தப்பட இருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து மாவட்ட வனஅதிகாரி ரெயில் நிலையத்து விரைந்து சென்றனர்.

பின்னர் ரெயில்வே போலீசாரின் உதவியுடன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை நடத்தினார்கள்.

வாலிபரிடம் விசாரணை

அப்போது ரெயிலின் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் ஒன்றில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்த வாலிபர் ஒருவாிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அந்த பையில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 2 கிலோ ஆகும். இதனை தொடர்ந்து அம்பர்கிரிசை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த வாலிபாரை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனஅலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள்.

6 பேர் கைது

விசாரணையில், அழகியபாண்டியபுரம் தோனயோர்புரத்தை சேர்ந்த தினகரன் லாசர்(வயது 35) என்பதும், திமிங்கிலத்தின் உமிழ்நீர் கட்டியை ரெயிலில் கடத்தி சென்று மும்பைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து தினகரன் மற்றும் பெருவிளை விநாயகர் தெருவை சேர்ந்த அருள்(27), கீழ பெருவிளை மகேஷ்(42), பார்வதிபுரம் திலீப் குமார்(36), ஆசாரிபள்ளம் சதீஷ்(35), தம்மத்து கோணம் சுபா தங்கராஜ்(49) ஆகிய 6 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறுயாருக்கு தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story