அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:47 PM GMT)

சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை மந்திரியிடம் மனு அளிக்கப்பட்டது

சிவகங்கை

சிவகங்கையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி அனைத்து கட்சியினர் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் அனைத்து கட்சி பொதுநல அமைப்புகள் மற்றும் அனைத்து சங்கங்கள் சார்பில் டெல்லி சென்றனர்.

நேற்று அவர்கள் மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி ராவ் சஹீப் பட்டீல் தானேவை நேரில் சந்தித்து சிவகங்கை வழியாக செல்லும் ரெயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என்றும் காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீடிக்க வேண்டும் என்றும் ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். அப்போது காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப் கான், ஜெயகாந்தன், துபாய் காந்தி, மகேஷ் குமார், ரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர். அந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி உறுதியளித்தார்.


Next Story