விஷ சாராயம் அருந்தி சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் - ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை


விஷ சாராயம் அருந்தி சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் - ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை
x

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. நேற்று காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

நேற்று இரவு நிலவரப்படி 18 பேர் பலியான நிலையில், இன்று காலையில் மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 35 ஆக அதிகரித்தது. இன்று பிற்பகல் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷ சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story