அக்னிபத் விவகாரம்: கரூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அக்னிபத் விவகாரம்: கரூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

அக்னிபத் விவகாரம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூர்

அக்னிபத் திட்டம்

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயில்களுக்கு தீ வைத்தனர். இதனால் தெற்கு ரெயில்வேயில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்கள் குறிப்பிட்ட நகரங்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் வன்முறை போராட்டத்தை கைவிடுமாறும், ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு

இந்நிலையில் அக்னிபத் பிரச்சினை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணன், ஜி.ஆர்.பி. சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் போலீசார் ரெயில்நிலையம் முன்பும், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை, இருப்பு பாதை காவல்துறை, கரூர் டவுன் ரோந்து, கரூர் டவுன் போலீசார் உள்ளிட்ட 60 போலீசார் தொடர்ந்து கரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story