வக்கீல்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா அறிவுரை


வக்கீல்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா அறிவுரை
x

குளித்தலையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா திறந்து வைத்து வக்கீல்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவுரை கூறினார்.

கரூர்

நீதிமன்றம் திறப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிதாக கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில், சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை நீதிபதி ராஜா திறந்து வைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

மூத்த வக்கீல் என்றால் தமிழ்நாட்டில் அட்வகேட் ஜெனரல், இந்தியாவில் அட்டரினி ஜனரல் என்பார்கள். இந்தக் குளித்தலையில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. 19 நீதிமன்றங்கள் கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ளது. இப்போது திறக்கப்பட்ட இந்த கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்துடன் 20 நீதிமன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நான் பல மாவட்டங்களுக்கு சென்று நீதிமன்றங்களை பார்த்து வருகிறேன். கரூர் மாவட்டத்தை பொருத்தவரை சட்டத்திற்கு பயந்து வாழக்கூடிய மக்கள் இங்கு இருக்கிறார்கள். போக்சோ வழக்கு பல நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கிறது. கரூர் நீதிமன்றத்தை பொறுத்தவரை 19 போக்சோ வழக்குகள் மட்டும்தான் உள்ளன. நான் ஏற்கனவே கரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது 7 வழக்குகள் தான் இருந்தது. தற்போது உள்ள 19 வழக்குகளையும் விரைவாக மகிளா நீதிமன்றம் முடிக்க வேண்டும்.

தெளிவாக பேச வேண்டும்

அதன் மூலம் கரூர் மாவட்டம் தமிழகத்திலேயே மட்டுமல்லாமல் உலகத்திலேயே போக்சோ வழக்கு இல்லாத மாவட்டமாக இருக்கும். ஒரு வக்கீல் மற்றவருக்காக பேசக்கூடிய ஒரு பணியாளர் ஆவார். நீதிமன்றத்தில் பேசும்போது நியாயப்படி, தெளிவாக, உண்மையாக பேச வேண்டும். எல்லா விஷயங்களையும் தெரிந்து தெளிவான வக்கீலாக நீங்கள் இருக்க வேண்டும். அப்போது தான் நீதிபதி தெளிவான தீர்ப்புகளை வழங்க முடியும்.

நீங்கள் பேசுவது ஒரு பொருளோடு, ஒரு நியாயத்தோடு ஒரு உண்மையோடு வாதாடினால் கண்டிப்பாக அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். எதற்காக நான் இதை சொல்கிறேன் என்றால் ஒரு சில வக்கீல்கள் தெளிவு இல்லாமல் வாதாடுகிறார்கள். அதனால் வழக்குகள் தாமதம் ஏற்படுகிறது. தெளிவாக வாதாடினால் தான் நீங்கள் எடுத்து நடத்தக்கூடிய வழக்குகள் வெற்றி பெறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்று சொல்வார்கள். எந்த ஒரு மனிதனும் எடுத்தவுடன் வரைந்து விட முடியாது.

இனிமையான வார்த்தைகளை...

எல்லாவற்றுக்கும் ஒரு பயிற்சி வேண்டும் அதை நாம் பழக வேண்டும். சாக்ரடீஸ் இளைஞர்களுக்குச் சொன்ன மிகப்பெரிய அறிவுரை என்னவென்றால் நீங்கள் எங்கு பேச போனாலும், என்ன பேச போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை விட, அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.

நீங்கள் வாதாட வரும்போது எல்லா விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு என்ன சொல்ல வேண்டும், அதை எப்படி சொல்ல வேண்டும், இனிமையான முறையில் சொல்லி உங்களுடைய வழக்குகளை வாதாட வேண்டும் அப்போதுதான் நீதிபதிகள் புரிந்து கொண்டு நல்ல தீர்ப்பு வழங்க முடியும். இதனால் வக்கீல்கள் நல்ல இனிமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் வாதாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்றவர்கள்

இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி குமரேஷ் பாபு, கரூர் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம், கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், எம்.எல்.ஏ. மாணிக்கம், வக்கீல்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story