மாணவிகளுக்கு மாதந்தோறும் மனநல ஆலோசனை


மாணவிகளுக்கு மாதந்தோறும் மனநல ஆலோசனை
x

பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கூறினார்.

தர்மபுரி

பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கூறினார்.

மாநில மாநாடு

தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் 27-வது மாநில மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவி ஷீலு தலைமை தாங்கினார். நிர்வாகி சுமதி வரவேற்றார். மாநில செயலாளர் பொன்னுத்தாய் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாகி ரங்கநாயகி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளனர். இதனால் மாரல் சயின்ஸ் என்ற பாடப்பிரிவை கொண்டு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். அவர் வரும் கல்வி ஆண்டு முதல் மாரல் சயின்ஸ் பாடப்பிரிவு கொண்டு வரப்படும் என கூறியுள்ளார். செல்போனால் தொந்தரவு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

மனநல ஆலோசனை

மாநாட்டை தொடர்ந்து மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் உள்ள மகளிர் விடுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். தற்போது விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்கப்படும். தற்போதைய நவீன யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருகியுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி பெண்களுக்கு நல்ல உபயோகமாக உள்ளது. பெண்கள் கல்லூரிகளில் நடக்கும் குற்றங்களை தைரியமாக சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story