சாமி தரிசனத்திற்கு சென்ற வாலிபர் மலையில் காயத்துடன் மயங்கி கிடந்தார்


சாமி தரிசனத்திற்கு சென்ற வாலிபர் மலையில் காயத்துடன் மயங்கி கிடந்தார்
x
தினத்தந்தி 18 Dec 2022 6:45 PM GMT (Updated: 18 Dec 2022 6:45 PM GMT)

பிரான்மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது வழிதவறிய வாலிபர் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்தார். இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

பிரான்மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது வழிதவறிய வாலிபர் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்தார். இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்ய

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பிரான்மலை. இங்கு சுமார் 5 கிலோ மீட்டர் நீளம், 2500 அடி உயரத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற பாலமுருகன், விநாயகர் கோவில் உள்ளது. அதன் அருகில் தர்காவும் உள்ளது. இந்த மலைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் வசித்து வரும் பழனிவேல் மகன் விஷ்ணுராம் (வயது 22) என்பவர் பிரான்மலை உச்சியில் உள்ள பாலமுருகன், விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். விஷ்ணுராம் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்திருந்தார்.

3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கையில் அவர் வழி தவறி வேறு பாதையில் சென்றார். நீண்டதூரம் சென்ற பிறகுதான் வழி தவறியதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் தனது பெற்றோருக்கு செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

தேடுதல் வேட்டை

இதையடுத்து அவரை பெற்றோர் செல்போனில் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இரவு நீண்டநேரம் ஆகியும் தனது மகன் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பிரான்மலை அடிவாரத்திற்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலீசார், வனத்துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு முதல் பிரான்மலை பகுதியில் வாலிபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நள்ளிரவு ஒரு மணி வரை தேடியும் விஷ்ணுராமை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி விட்டனர்.

மயங்கி கிடந்தார்

நேற்று அதிகாலையில் மீண்டும் அவர்கள் விஷ்ணுராமை தேடும் பணி நடந்தது. அப்போது மலையில் உள்ள நரையன் கல்மேடு என்ற பகுதியில் பாறை அருகே தலையில் காயம் அடைந்த நிலையில் விஷ்ணு ராம் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை தேடுதல் குழுவினர் மீட்டு மலையடிவாரத்துக்கு தூக்கி வந்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் பிரான்மலை பகுதிக்கு மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்வதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story