ரூ.50 லட்சத்துடன் மாயமான அ.தி.மு.க. பிரமுகரின் டிரைவர்


ரூ.50 லட்சத்துடன் மாயமான அ.தி.மு.க. பிரமுகரின் டிரைவர்
x

பெரியகுளத்தில், ரூ.50 லட்சத்துடன் மாயமான அ.தி.மு.க. பிரமுகரின் டிரைவர் போலீசில் சிக்கினார்.

தேனி


அ.தி.மு.க. பிரமுகர்


தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் நாராயணன் (வயது 40). இவர், தேனி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர், பெரியகுளத்தில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.


அவருடைய கார் டிரைவர் ஸ்ரீதரன் (38). இவரும், பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாராயணன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு காரில் சென்றார். காரை ஸ்ரீதரன் ஓட்டினார்.


ரூ.50 லட்சம் மாயம்


பின்னர் உசிலம்பட்டியில் இருந்து திரும்பி வரும்போது, ஆண்டிப்பட்டியில் நாராயணன் இறங்கி விட்டார். அப்போது ஸ்ரீதரனிடம் ரூ.50 லட்சத்தை கொடுத்து தனது வீட்டில் கொடுக்குமாறு நாராயணன் கூறினார்.


அதன்பின்பு இரவில் நாராயணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த தனது குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சத்தை ஸ்ரீதரன் கொடுத்தாரா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் பணம் எதுவும் தரவில்லை என்றும், காரை மட்டும் நிறுத்தி விட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பணத்துடன் ஸ்ரீதரன் மாயமானதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.


போலீசில் புகார்


இதனையடுத்து ஸ்ரீதரனின் செல்ேபான் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டார். அப்போது அவருடைய செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நாராயணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.


இதற்கிடையே ஸ்ரீதரன் மனைவி கெங்கம்மாள், பெரியகுளம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரனை தேடினர்.


மேலும் அவரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் மாயமான ஸ்ரீதரனை ேதடி வந்தனர்.


பணம் பறிமுதல்


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர்.


பின்னர் அவர், பெரியகுளம் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் ஸ்ரீதரனிடம் இருந்து ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


போலீசாரிடம் சிக்கிய ஸ்ரீதரன், பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story