நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும்


நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும்
x

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்


தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களும், கிராமப்புறங்களும் நிலத்தடி நீர் ஆதாரங்களையே குடிநீர்தேவைக்கு நம்பியிருந்த நிலையில் தமிழக அரசு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கும், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதிகளுக்கும், 487 கிராமப்பகுதிகளுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்கு கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட அளவு

ஆனால் எந்த நோக்கத்திற்காக கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில் இத்திட்டங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் கிடைக்காததால் அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிலும் விருதுநகர் நகராட்சி பகுதிக்கு தினசரி 45 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டிய நிலையில் தற்போது 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. சில நாட்கள் முற்றிலுமாக தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது. மேலும் கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முடிய வேண்டிய நிலையில் இன்னும் முடிவடையாத நிலை நீடிக்கிறது.

வலியுறுத்தல்

அனைத்து நகர் பகுதிகளிலும் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் 10 முதல் 15 நாட்களாக உள்ளது.

எனவே குடிநீர் வடிகால் வாரியம் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவு தாமிரபரணி தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து விட்ட நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் பாராமுகமாக உள்ளது ஏற்புடையதல்ல. எனவே இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story