ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.3 லட்சம் கையாடல்: மகன் தலைமறைவானதால் தாய் தீக்குளித்து தற்கொலை


ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.3 லட்சம் கையாடல்: மகன் தலைமறைவானதால் தாய் தீக்குளித்து தற்கொலை
x

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி கம்பெனி பணம் ரூ.3 லட்சம் கையாடல் செய்த மகன் தலைமறைவானதால் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

சென்னை

சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி (வயது 48). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகன் தேவேந்திரன் (22). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தேவேந்திரன் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேராசையில் தான் பணிபுரிந்து வரும் கம்பெனி பணம் ரூ,3 லட்சத்தை கையாடல் செய்து ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார்.

இதில் நஷ்டம் அடைந்ததால் அச்சமடைந்த தேவேந்திரன் வீட்டில் யாரிடம் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து திருடிய பணத்தை தேவேந்திரன் திருப்பி செலுத்தாததால் கம்பெனி நிர்வாகம் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக தேவேந்திரனின் பெற்றோர் பணத்தை விரைவில் ஒப்படைத்து விடுவதாக கூடுவாஞ்சேரி போலீசில் உத்தரவாதம் அளித்ததாக தெரிகிறது. இதற்கிடையே தேவேந்திரன் தலைமறைவாகி விட்டதால் பணத்தை கட்டமுடியாமல் பெற்ரோர் தவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய்யை ஊற்றி கொண்டு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்து, செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, செல்வி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தியில் கருகி பலியான செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story