சிட்டா அடங்கல் வழங்க நடவடிக்கை


சிட்டா அடங்கல் வழங்க நடவடிக்கை
x

தஞ்சையில் விவசாய கடன் பெறுவதற்கு சிட்டா அடங்கல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் விவசாய கடன் பெறுவதற்கு சிட்டா அடங்கல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன்படி சக்கரசாமந்தம் மேலத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- சக்கரசாமந்தம், வடகால், வெண்ணலோடை, சீராளூர் ஆகிய கிராமத்தினர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சிட்டா அடங்கல் கேட்டிருந்தோம். அதற்கு அவர் 1432 பசிலி நெல் சாகுபடி செய்கிறோம் என சிட்டா அடங்கல் வழங்கினார்.

சிட்டா அடங்கல்

அதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரிடம் வழங்கினோம். இந்த சிட்டா அடங்கல் செல்லுபடி ஆகாது என அவர் கூறினார்.பிறகு எப்படி சிட்டா அடங்கல் வாங்குவது என அவரிடம் கேட்டபோது 1433 பசிலி நெல் சாகுடி செய்வதாக சிட்டா அடங்கல் வாங்கி வர கூறினார். நாங்கள் மீண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் 1433 பசிலி எண்ணில் நெல் சாகுபடி செய்கிறோம் என சிட்டா அடங்கல் தரும்படி வலியுறுத்தினோம்.

அதற்கு கிராம நிர்வாக அதிகாரி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே சிட்டா அடங்கல் வழங்க முடியும் என தெரிவித்தார். தற்போது விவசாய நிலங்கள் உழவு செய்து நடவு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. விவசாய கடன் கிடைத்தால் மட்டுமே விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கண்டு மேற்கண்ட கிராமத்தினருக்கு சிட்டா அடங்கல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நிலஅளவை செய்ய வேண்டும்

ஒரத்தநாடு தாலுகா ஈச்சங்கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வீராசாமி (வயது 85) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கூலி தொழிலாளியான எனக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். எனது மனைவி இறந்து விட்டார். நான் 60 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் செய்து வரும் இடத்துக்கு நீதிமன்றத்தில் எனக்கு சாதகமாக உத்தரவு வந்துள்ளது.

ஆனால் உத்தரவு வந்து 1 வருடம் ஆகியும் நிலஅளவை செய்யப்படாமல் இருக்கிறது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனது நிலத்தை அளவீடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story