ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை


ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 21 July 2023 8:39 PM GMT (Updated: 23 July 2023 10:23 AM GMT)

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

சேலம்

சூரமங்கலம்:-

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆலோசனை கூட்டம்

சேலத்தில் ரெயில் பயணிகள் ஆலோசனை குழுவின் 25-வது கூட்டம் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தலைமை தாங்கினார். கூடுதல் மேலாளர் பி.சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா, கூடுதல் கோட்ட இயக்க மேலாளர் அனித் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆலோசனை குழு சார்பில் 16 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் எம்.பூபதி ராஜா பேசுகையில், கோவை- சென்னை இடையே வந்தே பாரத் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நீலகிரி மலை ரெயில், ஒரு ஜோடி வாராந்திர சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் உயர் மட்ட மேம்பாலங்கள், நகரும் படிகட்டு, லிப்ட் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் சிறிய ரெயில் நிலையங்களிலும் குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனஎன்றார்.

பல்வேறு வசதிகள்

தொடர்ந்து ரெயில் பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பேசுகையில், புதிய ரெயில் சேவைகளை இயக்குதல், ஏற்கனவே இயக்கப்படும் ரெயில்களின் சேவையை அதிகரித்தல், கூடுதல் நிறுத்தங்களை ஏற்படுத்தி தருதல், நடைமேடைகளை நீட்டித்தல், லிப்ட் வசதி, நகரும் படிகட்டுகளை அமைத்தல், ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

ஆலோசனை குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே கோட்ட அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் அதிகாரிகள் பேசுகையில், சேலம் ரெயில்வே கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஆலோசனை குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்என்றனர்.

நடவடிக்கை

கூட்டத்தில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பேசுகையில், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சேலம் ரெயில்வே கோட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் ரெயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முறையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.


Next Story