இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை - எல்.முருகன்
எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருவதாக எல். முருகன் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டுக்கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களிடம் 10 சதவீதம் பணம் இருந்தாலே 60 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் 1 லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றார்.