24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

கொத்தடிமை தொழிலாளர் புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

கொத்தடிமை தொழிலாளர் புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறியதாவது:-கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு சட்டபூர்வ பாதுகாப்புகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசு உயர்மட்ட கண்காணிப்புக் குழு, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, துணைப்பிரிவு கண்காணிப்புக் குழு ஆகியவை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வேண்டிய சமூக பொருளாதார மறுவாழ்வை ஏற்படுத்தி தரவேண்டும்.விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான புகார்களை 24 மணி நேரத்துக்குள் புகாரின் தன்மையை கண்டறிந்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தடிமை தொழிலாளர்களின் முழு விவரங்களை பதிவு செய்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறுவாழ்வு நிதி உதவி

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உடனடி நிவாரணத் தொகை ரூ.30 ஆயிரம், மறுவாழ்வு நிதி உதவியாக ஆண் பயனாளிக்கு ரூ.1 லட்சமும், பெண் மற்றும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சமும், கடுமையான இழப்புகள் அல்லது கட்டாய தொழிலாளர்களாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு ரூ.3 லட்சமும் மறுவாழ்வு நிதிஉதவியாக வழங்கப்படுகிறது.எனவே கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு தேவையான கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவா் கூறினார். கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வசந்தகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story