கட்டுரை போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை


கட்டுரை போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
x

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு நாள் விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு தமிழ் வளர்ச்சி துறையின் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில், கட்டுரை போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களாக பள்ளி முதுகலை தமிழ் ஆசியர்கள் செயல்பட்டனர். பேச்சு போட்டியில் முதலிடத்தை பேரளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் கோகுலும், 2-ம் இடத்தை அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் அபிராமியும், 3-ம் இடத்தை பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மணிரத்னமும் பிடித்தனர். கட்டுரை போட்டியில் முதலிடத்தை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் தீபாவும், 2-ம் இடத்தை எழுமூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் காவியாவும், 3-ம் இடத்தை லெப்பைக்குடிகாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் சத்தியாவும் பிடித்தனர். அவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவால் விரைவில் வழங்கப்படவுள்ளது, என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். பேச்சு, கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் வருகிற 13-ந்தேதி சென்னையில் எழும்பூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story