தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவிற்கு முதல்-அமைச்சர்தான் காரணம்


தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவிற்கு முதல்-அமைச்சர்தான் காரணம்
x

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவிற்கு முதல்-அமைச்சர்தான் காரணம் என பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் கூறினார்.

ராமநாதபுரம்

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சிறுபான்மை மக்களுக்கு பிரதமர் அளித்துள்ள திட்டங்களை விளக்கி கூறி பிரசாரம் செய்துவரும் நாங்கள் ராமநாதபுரம் வரும் வழியில் இளையான்குடி பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் குடித்துவிட்டு வெளியில் வந்தோம். அப்போது சிலர் எங்கள் மீது மிக கடுமையான தாக்குதல் நடத்தினர். இவை அனைத்தும் காவல்துறையினர் முன்னிலையில் நடந்தது. தாக்குதல் நடக்கும்போது காவல்துறை அவர்களை தடுக்கவில்லை. இதன்மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை காண முடிகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பா.ஜ.க. இதனை மக்கள் புரட்சியாக, மக்கள் போராட்டமாக கையில் எடுக்கும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு முதல்-அமைச்சர்தான் முழு காரணம். எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்தான் பொறுப்பு. இவ்வளவு நடந்தும் நாங்கள் எதிர்வினையாற்றவில்லை. பா.ஜ.க.வினர் எதிர்வினையாற்றினால் அதனை வைத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதனை பா.ஜ.க.மீது பழி போடுவதுதான் அவர்களின் நோக்கம். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக பா.ஜ.க.வில் இணைவதை சகித்துக்கொள்ள முடியாமல் தாக்குதல் நடத்துகின்றனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஒட்டுமொத்த நிதியை மத்திய அரசு கடந்த மாதம் முடக்கி உள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்றவர்களுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளது வேதனைக்குரியது. மத்திய அரசு இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இஸ்லாம் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை. இவ்வாறு கூறினார்.


Next Story