போலீஸ் எனக்கூறி வாலிபரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன், பணம் பறிப்பு


போலீஸ் எனக்கூறி வாலிபரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன், பணம் பறிப்பு
x

குடியாத்தத்தில் போலீஸ் எனக்கூறி வாலிபரிடம் மோட்டார்சைக்கிள், பணம் மற்றும் செல்போனை பறித்து சமன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

உறவினர் வீட்டுக்கு...

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கணக்கர் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார.் இவரது மகன் காமேஷ் (வயது 23), பால் வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது நண்பரின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பரதராமியில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமம் அருகே மோட்டார் சைக்கிளை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் இங்கு ஏன் நின்று கொண்டிருக்கிறாய் என கேட்டு, இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் போல் உள்ளது என காமேஷை மிரட்டி உள்ளார். அதற்கு அவர் இது எனது நண்பனின் மோட்டார் சைக்கிள் என்று கூறியுள்ளார். அதனை நம்பாமல் அந்த வாலிபர் தொடர்ந்து மிரட்டவே, காமேஷ் தனது நண்பரான மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு போன் செய்து வாகனத்திற்கான சான்றுகளை வாட்ஸ் அப்பில் அனுப்ப கூறி, அதை மிரட்டிய வாலிபரிடம் காட்டியுள்ளார்.

போலீஸ் என கூறினார்

உடனே உன்னை பார்த்தால் சந்தேகமாக உள்ளது என கூறிய அந்த வாலிபர் உடனடியாக ஒருவருக்கு போன் செய்து போலீஸ்காரர் வருகிறார் என தெரிவித்துள்ளார். அதன்படி போலீஸ் என கூறிக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். அவரும் அந்த வாலிபரம் சேர்ந்து காமேஷை நீ திருட்டு வண்டி வைத்துள்ளாய், உன் மீது கஞ்சா வழக்கு போட வேண்டும் என மிரட்டி குடியாத்தத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி பின்பக்கம் உள்ள கன்னிதோப்பு என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அவரை மிரட்டி உன் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் கஞ்சா கேஸ் போட்டு உள்ள தள்ளி விடுவோம், வழக்கு போடாமல் இருக்க ரூ.30 ஆயிரம் கொடு என மிரட்டி உள்ளனர். அதற்கு காமேஷ் என்னிடம் பணம் இல்லை வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

செல்போன், பணம் பறிப்பு

உடனே காமேஷின் மோட்டார் சைக்கிள், அவர் வைத்திருந்த செல் போன் மற்றும் 1,500 ரூபாயை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து உறவினர்களுடன் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் காமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலீஸ் என கூறி மோட்டார் சைக்கிள், செல்போன், பணம் பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story