அய்யன்கொல்லி அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்
அய்யன்கொல்லி அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
பந்தலூர்
அய்யன்கொல்லி அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
குண்டும், குழியுமான சாலை
பந்தலூர் தாலுக்கா அய்யன்கொல்லி அருகே செம்பக்கொல்லியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர் இந்த பகுதிக்கு அய்யன்கொல்லியிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள சோதனை சாவடியிலிருந்து வலதுபுறமாக அரசு தேயிலை தோட்டம் வழியாக சாலை செல்கிறது.
இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாகதான் பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் நடந்து செல்ல வேண்டும். மேலும் அவசர தேவைகளுக்கு நோயாளிகளையும், கர்ப்பிணி பெண்களையும் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டுசெல்லவேண்டும். இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
பொருட்களை சுமந்து செல்வதால் அவதி
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:- அய்யன்கொல்லி அருகே செம்பக்கொல்லியில் உள்ள அனைத்து சாலைகளும் தரமற்ற நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் நடக்க முடியாதவர்கள் ஆட்டோகளில் தான் 2 கிலோமீட்டர்தொலைவில் உள்ள அய்யன்கொல்லி ரேசன் கடையிலிருந்தும் மளிகை கடைகளிலிருந்தும் ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்டகளை வாங்கிவர வேண்டி உள்ளது. குறிப்பாக ஆட்டோக்களும் இங்கு வருவதில்லை.
சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் ஆம்புலன்ஸ்களும், ஆட்டோக்களும் செல்வதில்லை. இதனால் நோயாளிகளையும் சோதனை சாவடி வரை சுமந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலையில் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறுகிறது. சாலை நாளுக்குநாள் உடைந்துவருவதால் பாதாள குழிகளாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
-