இன்று ஆடி அமாவாசை: ஈரோடு மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை மந்தம்


இன்று ஆடி அமாவாசை: ஈரோடு மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை மந்தம்
x

இன்று (திங்கட்கிழமை) ஆடி அமாவாசை என்பதால் ஈரோடு மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

ஈரோடு

இன்று (திங்கட்கிழமை) ஆடி அமாவாசை என்பதால் ஈரோடு மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

மீன் மார்க்கெட்

ஈரோடு ஸ்டோனிபாலம், கருங்கல்பாளையம் காவிரி ரோடு ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடல் மீன்களும், அணை மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

விற்பனை மந்தம்

இந்தநிலையில் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று சுமார் 20 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால் மீன் வாங்குவதற்கு மக்கள் குறைவாகவே வந்திருந்ததால், விற்பனை மந்தமாக காணப்பட்டது. அதே சமயம் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. அதேபோல் இந்த வாரமும் விலையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் விற்பனையானது.

இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், "இந்த வாரம் மார்க்கெட்டுக்கு மீன்களின் வரத்து வழக்கம்போல் காணப்பட்டது. ஆனால் நாளை (அதாவது இன்று) ஆடி அமாவாசை என்பதால் இன்றில் (அதாவது நேற்று) இருந்தே பலர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தனர். இதனால் மீன்களின் விற்பனை மந்தமாக காணப்பட்டது. விலையிலும் பெரிய அளவில் மாற்றமில்லை", என்றார்.

ஒரு கிலோ ரூ.1,400

ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

வஞ்சிரம் - ரூ.1,000, வெள்ளை வாவல் - ரூ.1,400, விலாங்கு மீன்- ரூ.400, பாறை - ரூ.450, இறால் - ரூ.500, சீலா - ரூ.450, கருப்பு வாவல் - ரூ.600, மயில் மீன் - ரூ.700, கிளி மீன் - ரூ.600, அயிலை - ரூ.250, மத்தி - ரூ.250, சங்கரா - ரூ.400, கொடுவா - ரூ.450, நெத்திலி - ரூ.250

இதேபோல் ஒரு கிலோ நண்டு ரூ.400-க்கு விற்பனையானது.


Next Story