குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி


குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 12 Jun 2023 6:45 PM GMT)

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி கடலூரில் பரபரப்பு

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒருவர் தனது மனைவி, மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மற்றொரு மகனுடன் வந்தார். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பண்ருட்டி அருகே வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்த தொழிலாளி சரவணன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சரவணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக தவறான புகாரை அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதனால் அந்த பெண்ணின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சரவணன் வீட்டை சூறையாடியுள்ளனர். மேலும் ஊரில் யாரும் இருக்கக்கூடாது, ஊருக்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என சரவணன் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். அதனால் மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்று இனி தீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர். பின்னர் சரவணன், கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story