திருத்தணியில் கணவனை மீட்டு தரக்கோரி கைக்குழந்தையுடன் பெண் தர்ணா


திருத்தணியில் கணவனை மீட்டு தரக்கோரி கைக்குழந்தையுடன் பெண் தர்ணா
x

திருத்தணியில் கணவனை மீட்டு தரக்கோரி கைக்குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் உள்ள கீழ் நெடுங்கல் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஷாம் (வயது 28). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி (வயது 22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஷாம் வேலைக்குச் சென்ற இடத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது தாய் வீட்டிற்கு ஜோதிலட்சுமி சென்றுள்ளார். தனது விருப்பத்திற்கு இடையூறு செய்வதாக கருதி ஷாம் கடந்த மாதம் மாமியார் வீட்டிற்குச் சென்று ஜோதிலட்சுமியை அடித்து உதைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து கடந்த மாதம் 19-ந்தேதி ஜோதிலட்சுமி திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது கைக்குழந்தையுடன் அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் முன்பு ஜோதிலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஜோதிலட்சுமியின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தினார். கணவனை மீட்டு தரக்கோரி, மகளிர் போலீஸ் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story