ஸ்கூட்டர், ஜீப்பை சேதப்படுத்திய காட்டு யானை


ஸ்கூட்டர், ஜீப்பை சேதப்படுத்திய காட்டு யானை
x

கூடலூர் அருகே காட்டு யானை ஸ்கூட்டர், ஜீப்பை சேதப்படுத்தியது. அப்போது ஸ்கூட்டரை ஓட்டி வந்த தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே காட்டு யானை ஸ்கூட்டர், ஜீப்பை சேதப்படுத்தியது. அப்போது ஸ்கூட்டரை ஓட்டி வந்த தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காட்டு யானை புகுந்தது

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது. தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒற்றவயல், மச்சிக்கொல்லி, வெள்ளரிக்காபட்டணம், பேபி நகர், செம்பக்கொல்லி, செட்டியங்காடி, குருமன்கொல்லி உள்பட பல கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விநாயகன் என அழைக்கப்படும் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் குடிநீர் தேக்க தொட்டி, வாகனங்களையும் உடைத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு பாலம் வயல் பகுதியில் காட்டு யானை புகுந்தது. இதனால் அன்றாட பணிகளை செய்து கொண்டிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்ற தொழிலாளி தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

ஸ்கூட்டர், ஜீப் சேதம்

தொடர்ந்து காட்டு யானை தனக்கு எதிரே வருவதை கண்ட அவர், ஸ்கூட்டரை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை கண்ட காட்டு யானை அவரது ஸ்கூட்டரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் ஸ்கூட்டர் உடைந்து பலத்த சேதம் அடைந்தது. பின்னர் அங்கிருந்து சாலையில் சென்ற காட்டு யானை ஈஸ்வரன் என்பவரது ஜீப்பை தனது தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனியார் தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை சென்றது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, பல மாதங்களாக காட்டு யானை ஊருக்குள் வந்து அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே, யானை ஊருக்குள் வராமல் தடுக்க அகழி அல்லது சூரிய சக்தி மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story