கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும்


கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும்
x
தினத்தந்தி 7 Nov 2022 6:45 PM GMT (Updated: 7 Nov 2022 6:11 PM GMT)

கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும்

திருவாரூர்

வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் புனவாசல், கிளியனூர், உச்சுவாடி, சோலாட்சி, பூசங்குடி, மாயனூர், எள்ளுக்கொல்லைகாலனி, மாதாகோவில்கோம்பூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் வீடுகள் பக்கத்தில் கொட்டகை அமைத்து ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இதில் மாடுகள் தரும் பாலை விற்று பலர் குடும்பம் நடத்தி வருகின்றனர். இதனால் கால்நடைகளை அந்த பகுதியில் உள்ள மக்கள் முறையாக பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இல்லை.

கால்நடைகள் இறந்துள்ளன

இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது பல கால்நடைகள் இறந்துள்ளன. இதனால் வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வடபாதிமங்கலத்தில் மாடுகளுக்கு கவனை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் இதுவரை கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து வடபாதிமங்கலம் கலா கூறுகையில், வடபாதிமங்கலம் பகுதி கிராமம் என்பதால் போதிய வருமானம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் இங்கு உள்ள ஏழை, எளிய மக்கள் பலர் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கால்நடைகள் போதிய பராமரிப்புடன் வளர்க்கப்பட்டாலும், அவைகளுக்கு நோய் ஏற்பட்டு அவதி அடையும் போது சிகிச்சை அளிப்பதற்கு வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இல்லாததால் பல கால்நடைகள் இறந்து விடுகின்றன. எனவே வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என்றார்.

கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து வடபாதிமங்கலம் ராஜா கூறுகையில், வடபாதிமங்கலம் பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. அதனால் குடும்பம் நடத்த போதிய வருமானம் கிடைக்காத நிலை அதிகம் உள்ளது. அதனால் கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஆனாலும் நோய் ஏற்படும் ஆடு, மாடுகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு இங்கு கால்நடை ஆஸ்பத்திரி இல்லை. இதனால் நோய் வாய்பட்ட கால்நடைகள் பல இறந்து விடுகின்றன. இங்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கவனை மட்டுமே அமைக்கப்பட்டது. எனவே வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story