கரூரில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வினை 2,013 பேர் எழுதினர்


கரூரில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வினை 2,013 பேர் எழுதினர்
x

கரூரில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வினை 2,013 பேர் எழுதினர். 385 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கரூர்

எழுத்து தேர்வு

தமிழக காவல்துறையில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் நேற்று காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மாலையில் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடந்தது.அதன்படி கரூர் மாவட்டத்தில் தேர்வு வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கொங்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

போலீசார் சோதனை

இந்த தேர்வினை எழுதுவதற்காக கரூர் மாவட்டத்தில் இருந்து 1,866 ஆண் தேர்வர்களும், 532 பெண் தேர்வர்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 398 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்துக்கு காலை 8 மணி முதலே வர தொடங்கினர். அவர்களை போலீசார் சோதனையிட்டு தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.மேலும் தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்பதால், தேர்வர்கள் கொண்டு வந்திருந்த செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முன்னதாக போலீசார் வாங்கி பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

385 பேர் தேர்வு எழுதவில்லை

தேர்வு அறைக்கு சென்றிருந்த தேர்வர்களுக்கு காலை 10 மணியளவில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு தேர்வு தொடங்கியது. மதியம் 12.30 மணிக்கு முதன்மை எழுத்து தேர்வு முடிந்தது. பின்னர் மாலை 3.30 மணியளவில் தமிழுக்கான தகுதி தேர்வு தொடங்கியது. அந்த தேர்வு மாலை 5.10 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வினை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரூர் மாவட்டத்தில் நடந்த தேர்வில் 1,568 ஆண் தேர்வர்களும், 445 பெண் தேர்வர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 13 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 298 ஆண் தேர்வர்களும், 87 பெண் தேர்வர்களும் என மொத்தம் 385 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவலர்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வு நடக்கிறது.


Next Story