விமான நிலையத்திற்கு பார்சலில் வந்த புலித்தோல்?


விமான நிலையத்திற்கு பார்சலில் வந்த புலித்தோல்?
x

விமான நிலையத்திற்கு பார்சலில் வந்தது புலித்தோலா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

புலித்தோல்?

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் உணவு பொருட்களான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால் பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் கார்கோ பிரிவின் மூலம் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்பே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் திருச்சி விமான நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைவாகவே இருக்கும்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் 35 பெட்டிகளில் பார்சல் பொருட்கள் வந்தன. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாகவும், அப்போது அதில் புலித்தோல் போன்ற பொருள் இருந்ததாகவும் தெரிகிறது.

அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றை சோதனைக்காக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதற்காக விமான நிலைய கார்கோ பிரிவிற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், அந்த பொருட்களை சோதனை செய்ததில் கொண்டு வரப்பட்டது ஆட்டு தோல் என்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால், ஆட்டுத்தோலினை எதற்காக மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

மேலும் 35 பார்சல் பெட்டிகளையும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைத்த தம்பதி, கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று, பின்னர் சென்னையில் இருந்து மீண்டும் திருச்சிக்கு விமானத்தில் வந்ததாக தெரிகிறது. அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அலங்காரத்திற்காக...

இதில், ஆட்டுத்தோலில் ஒரு மதநூல் சார்ந்த கருத்துகள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனை வீடுகளில் அலங்காரத்திற்காக மாட்டுவதற்கு கொண்டு வரப்பட்டதாகவும், தம்பதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவிலேயே அவர்கள் கொண்டு வந்தது புலித்தோலா அல்லது ஆட்டுத்தோலா என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story