அம்ரீத் பாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தை அதிகாரி குழு ஆய்வு


அம்ரீத் பாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தை அதிகாரி குழு ஆய்வு
x

மத்திய அரசின் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையத்தை நேற்று ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு திடீர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர்

மத்திய அரசின் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1,275 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 60 ரெயில் நிலையங்கள் தேர்வாகி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்ள ரெயில் நிலையங்கள் தரம் உயர்த்தி நவீன மாயமாக்கப்பட உள்ளன. எலக்ட்ரானிக் தகவல் பலகை, பயணிகளுக்கான ஓய்வு அறை, தரமான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்த வாளாகம், லிப்ட் வசதியுடன் கூடிய நடைபாலம் உள்பட பல்வேறு வசதிகள் இத்தகைய தேர்வு செய்யப்பட்ட ரெயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட உள்ளது. அவ்வாறு தமிழ்நாட்டில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்ள ரெயில் நிலையங்களில் கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையமும் அடங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வாகி உள்ள கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையத்தை சென்னை மண்டல ரெயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்த திட்டத்தின் கீழ் வரைபடங்களை கொண்டு கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், அதற்கான இடங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி அமைந்து உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களையும் அந்த குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த ஆய்விற்கு பிறகு கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அந்த குழுவினர் பெற்று கொண்டனர்.


Next Story