பொதுமக்கள் திடீர் போராட்டம்


பொதுமக்கள் திடீர் போராட்டம்
x

களக்காட்டில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு மூனாற்று பிரிவில் பிள்ளைமார், அருந்ததியர், கம்பர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான சுடுகாடுகள் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு 2 சுடுகாடுகளுக்கும் பேரூராட்சி மூலம் கொட்டகை கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் அங்கு நன்மைக்கூடமும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் களக்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி 2 சுடுகாடுகளையும் உள்ளடக்கி காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 2 சுடுகாடுகளுக்கும் செல்லும் பாதை கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. நண்மைக்கூடமும் சுவர் எழுப்பி மூடப்பட்டுள்ளது. இதனால் 3 சமுதாயத்தினர் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 சமுதாய பொதுமக்களும் அடைக்கப்பட்ட சுடுகாடுகளின் முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் சங்கரநாராயணன், அகில பாரத இந்து மகாசபா பொதுச்செயலாளர் முத்தப்பா, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் கூறுகையில், நகராட்சி கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றாமல், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நகராட்சி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக சுடுகாடுகளை அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. நகராட்சியின் இந்த நடவடிக்கையினால், யாராவது இறந்தால், சாலையில் வைத்தே தகனம் செய்யும் அவல நிலையை நகராட்சி உருவாக்கியுள்ளது. அடுத்தகட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம் என்றனர்.


Next Story