மறுவாழ்வுக்கு கிடைத்த காசோலையை மாற்ற முடியாமல் தவிக்கும் தொழிலாளி


மறுவாழ்வுக்கு கிடைத்த காசோலையை மாற்ற முடியாமல் தவிக்கும் தொழிலாளி
x
தினத்தந்தி 24 Jun 2023 7:47 PM GMT (Updated: 25 Jun 2023 11:03 AM GMT)

மறுவாழ்வுக்கு கிடைத்த காசோலையை மாற்ற முடியாமல் தவிக்கும் தொழிலாளி

தஞ்சாவூர்

மகளை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை சிறைவாசம் முடிந்து விடுதலையான தொழிலாளி தனது மறுவாழ்வுக்கு கிடைத்த காசோலையை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுள் தண்டனை

தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள ஏ.கே.காலனி முத்துசாமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 53). நெசவு தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(43). இவர்களுக்கு 2 வயதில் துர்காதேவி என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக 2003-ம் ஆண்டு சிவக்குமார் தனது மகள் துர்காதேவியை கிண்ற்றில் போட்டு கொலை செய்து விட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நன்னடத்தை விதிகள் காரணமாக அண்ணா பிறந்த நாளையொட்டி கடந்த 2022-ம் ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோது சிவக்குமாரும் விடுதலை செய்யப்பட்டார். 19 ஆண்டுகள் 3 மாதம் சிறைவாசம் அனுபவித்த சிவக்குமார் தஞ்சை வந்து மனைவியுடன் சேர்ந்து வசித்து வருகிறார். தற்போது தஞ்சையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

ரூ.50 ஆயிரத்துக்கு காசோலை

இந்த நிலையில் நன்னடத்தை காரணமாகவும், சிறையில் இருந்து விடுதலையானவரின் மறுவாழ்வுக்காகவும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த தொகை காசோலையாக கடந்த மாதம்(மே) 5-ந்தேதி சென்னையில் வழங்கப்பட்டது.

காசோலையை பெற்று வந்த சிவக்குமாருக்கு அதை மாற்ற வழி தெரியவில்லை. காரணம் அவருக்கு வங்கி கணக்கு கிடையாது. மேலும் ஆதார் அறிமுக காலக்கட்டத்தில் சிவக்குமார் சிறையில் இருந்த காரணத்தால் அவரால் ஆதார் அட்டை பெற முடியவில்லை. வாக்காளர் அடையாள அட்டையும் கிடையாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்.

மாற்ற முடியாமல் தவிப்பு

காசோலை கிடைத்து 50 நாட்கள் ஆகியும் அவரால் மாற்ற முடியவில்லை. சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி உடல் ஊனமுற்றவர். இவர்கள் தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். சிவக்குமார் வேலை செய்ததன் மூலம் கிடைக்கும் கூலி மற்றும் ஜெயலட்சுமிக்கு கிடைக்கும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகையை கொண்டு இவர்கள் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து சிவக்குமார் கூறுகையில், வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை வேண்டும் என்கிறார்கள். ஆதார் அட்டை எடுக்க சென்றால் 18 வயதிற்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். எனக்கு வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. இதனால் காசோலையை என்னால் மாற்ற முடியவில்லை. மிகவும் வறுமையில் வாடும் எனது குடும்பத்துக்கு இந்த தொகை கிடைத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்.

கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

காசோலை வழங்கி 50 நாட்கள் ஆகியும் என்னால் மாற்ற முடியவில்லை. எனது பெயரில் இருப்பதால் எனக்கு வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே மாற்ற முடியும் என்கிறார்கள். வங்கிக்கு சென்றால் ஆதார் அட்டை கேட்கிறார்கள். ஸ்மார்ட் ரேஷன் கார்டில் எனது பெயர் உள்ளது.

ஆனால் ரேஷன் கார்டிலும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதால் அங்கும் எனக்கு பொருட்கள் வழங்குவது இல்லை. அதனால் காசோலை காலாவதியாவதற்குள் எனக்கு உதவித்தொகை கிடைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story