பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்க வேண்டும்


பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Sep 2023 9:00 PM GMT (Updated: 8 Sep 2023 9:01 PM GMT)

1-ம் மைல்-வேடன் வயல் இடையே கட்டப்பட்ட பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

1-ம் மைல்-வேடன் வயல் இடையே கட்டப்பட்ட பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-ம் மைல், 2-ம் மைல், வேடன் வயல், தட்டக்கொல்லி, செளுக்காடி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு கூடலூர் நகருக்கு வந்து செல்கின்றனர். இதனால் கூடலூரில் இருந்து 1-ம் மைல் வழியாக வேடன் வயலுக்கு சாலை செல்கிறது.

இதன் குறுக்கே ஆற்று வாய்க்கால் செல்கிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் பகுதியில் பெய்த கனமழையின் போது வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் 1-ம் மைல் முதல் வேடன் வயல் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூடலூர் நகருக்கு செல்ல சாலை இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

இருபுறமும் சாலை அமைக்கப்படுமா?

தொடர்ந்து புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கியது. தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது 2 மாதங்களுக்கு மேலாக பணிகள் நடந்து, பாலம் கட்டும் பணி முடிந்தது. ஆனால், பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதற்கு பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்காததே காரணம் ஆகும். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் சாலை அமைத்து வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கவும், பாலத்தின் இருபுறமும் அந்த பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.


Related Tags :
Next Story