திம்பம் மலைப்பாதையில் படுத்திருந்த சிறுத்தைப்புலி
திம்பம் மலைப்பாதையில் படுத்திருந்த சிறுத்தைப்புலி
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தைப்புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வெளியேறியது. பின்னர் சிறுத்தைப்புலி திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே ரோட்டோரம் படுத்திருந்தது. பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி, அதன்பின்னர் அருகே உள்ள காட்டுக்குள் சென்று மறைந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்' என்றனர்.