நலிவடைந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்


செருப்பு தைக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது.

விருதுநகர்

கால் பாதங்களை பதம் பார்க்காமல் பாதுகாக்கும் கேடயமாக கருதப்படும் காலணிகள் (செருப்பு) இன்றைக்கு அழகுசாதன பொருட்கள் பட்டியலில் இணைந்துள்ளன.

தேடும் நிலை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலைய வெளிப்பகுதி போன்ற இடங்களில் வரிசையாக அமர்ந்து ஷூவுக்கு பாலீஷ் போடுவது, செருப்பு தைப்பது என்று செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் மிகவும் பிசியாக இருந்து வந்தனர்.

தற்போது செருப்புகள் பல்வேறு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த செருப்புகள் அறுந்து போனால் அடுத்த நொடியே தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பை வாங்கி பயன்படுத்தும் கலாசாரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பிய்ந்த செருப்பை தைத்து போடுவதை கவுரவ குறைச்சலாக கருதுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் செருப்பு தைக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது. பிய்ந்த செருப்பை தைத்து பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வருமானம் பாதிப்பு

செருப்பை போன்று தங்களுடைய தொழிலும் தேய்ந்து போய்விட்டது என்பது இந்த தொழிலை தாங்கி பிடித்து வரும் தொழிலாளர்களின் மனநிலையாக இருக்கிறது. செருப்புகள் அறுந்து போனால் அதை தூக்கி வீசிவிட்டு உடனடியாக புதிய செருப்புகளையே அனைவரும் பயன்படுத்தவும் முன் வந்துவிட்டனர்.

இதனால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வாழ்வாதாரம் பாதிப்பு

விருதுநகர் பாலகிருஷ்ணன்:-

விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறேன். 1990-ம் ஆண்டுஎம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது விருதுநகருக்கு வந்தார். அப்போது நான் தொழில் செய்வதற்கு பெட்டி தேவை என மனு கொடுத்தேன். என்னை போன்ற30 பேருக்கு பெட்டி கொடுக்கப்பட்டது. சமீபகாலமாக தோல் செருப்பு பயன்பாடு குறைந்து விட்டது. இதனால் என்னை போன்றவர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. ஏதோ ஒரு சிலர் தோல் செருப்பை சரி செய்ய எங்களிடம் வருகிறார்கள். தினசரி ரூ.100 முதல் ரூ. 150 வரை கிடைக்கிறது. என்னை போன்றவர்களுக்கு வாழ்வாதாரம் பாதித்த நிலையில் தமிழக அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்.

முள் குத்தாத செருப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லையா:- முன்பு செருப்பு அறுந்து போனாலும் அல்லது கிழிந்து போனாலும் தைத்து போட்டுக்கொள்வார்கள். ஆனால் தற்போது தூக்கி எறிந்து விட்டு புதிதாக வாங்கி போட்டு கொள்கின்றனர். ஒரு சிலர்தான் தைக்கின்றனர். வயல் வேலைக்கு செல்பவர்களுக்கு முள் குத்தாத வண்ணம் செருப்பு தயார் செய்து கொடுத்து வருகிறேன்.

எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பை சரி செய்யவும், நலிந்து வரும் எங்களின் தொழிலை பாதுகாக்கவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

மேம்பட நடவடிக்கை

சிவகாசி வேலுச்சாமி:- கடந்த 40 ஆண்டுகளாக திருத்தங்கல் பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். போதிய வருமானம் இல்லை. கடந்த காலங்களை போல் அறுந்த செருப்பை இப்போது பெரும்பாலானவர்கள் தைத்து போடுவதில்லை. நடுத்தர குடும்பத்தினர் மட்டும் தான் அறுந்த செருப்புகளை தைத்து போடுகிறார்கள். மழை, வெயில் என்று சாலையில் அமர்ந்து செருப்புகளை தைத்து கொடுத்து குறைந்த வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறேன். வருமானமாக தினமும் ரூ. 300 கூட கிடைப்பது இல்லை. விலைவாசி உயர்ந்து விட்டது. எனக்கு 5 பெண் குழந்தைகள். இந்த வருமானத்தை கொண்டு தான் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். என்னுடன் இந்த பகுதியில் 17 பேர் செருப்பு தைக்கும் பணியினை செய்து வந்தனர். தற்போது 2 பேர் மட்டும் இந்த பகுதியில் செருப்பு தைத்து வருகிறோம். அரசு எங்களுக்கு ஒரு பெட்டிகடை வைத்து கொடுத்து எங்கள் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

25 ஆண்டுகள்

அருப்புக்கோட்டை கருப்பசாமி:- எனது சொந்த ஊர் மல்லாங்கிணறு. தினமும் இங்கு வந்து அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறேன். தற்போது புதிய, புதிய வகையான செருப்புகள் வருவதால் எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது. தினமும் ரூ.300 முதல் ரூ.400 வரை தான் வருமானம் கிடைக்கிறது.


Next Story