அரசு பள்ளி வளாகத்தில் மாணவியை கடித்து குதறிய நாய்


அரசு பள்ளி வளாகத்தில் மாணவியை கடித்து குதறிய நாய்
x
தினத்தந்தி 25 July 2022 6:45 PM GMT (Updated: 25 July 2022 6:45 PM GMT)

போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவியை நாய் கடித்து குதறியது. மாணவிக்கு பார்வை திறன் பாதிக்கப்பட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் தாய் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவியை நாய் கடித்து குதறியது. மாணவிக்கு பார்வை திறன் பாதிக்கப்பட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் தாய் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) சி.முத்துமாரி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பொதுமக்களிடம் தையல் எந்திரம், சலவை பெட்டி, உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி, வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 297 மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் அலுவலர், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

விழிப்புணர்வு

தொடர்ந்து சென்னை மாமல்லாபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் குறித்து அச்சிடப்பட்ட மஞ்சப்பையை அனைத்து துறை அலுவலர்கள் மற்றும பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் வினோதினி, மதனகீர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவியை கடித்து குதறிய நாய்

இதற்கிடையே போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டியை அடுத்த மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர் தனது மகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) முத்துமாரியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்னுடைய மகள் ஆஷினி (வயது 13) 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த வெறிநாய் என்னுடைய மகளை கடித்து குதறியது. இதில் என்னுடைய மகளின் கண் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் மகளின் கண் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே என்னுடைய மகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மதுக்கடை

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் தென்னரசு தலைமையில் மாவட்டத் தலைவர் கலைகோபி உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

பாப்பாரப்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். வெளிநபர்கள் மது வாங்க வரும் போது சில சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story