தனியார் நிறுவன ஊழியருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


தனியார் நிறுவன ஊழியருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

பெரம்பலூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

புகார்

பெரம்பலூர் புறநகர் அரணாரை பிரிவு சாலையில் உள்ள கேப்டன் நகரை சேர்ந்தவர் முகமது சபீக் (வயது 36). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வணிக வளாகம் நிர்மலாநகரில் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் முகமது சபீக், அரணாரை கேப்டன் நகரில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வர்ணம் பூசும் வேலைக்காக, புதிய பஸ் நிலையம்-நான்கு வழி சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே உள்ள விக்னேஷ் ஏஜென்சியில் 35 மூட்டைகள் சுவற்றுக்கு பிர்லா ஒயிட் பட்டிபவுடர் ரூ.37 ஆயிரத்து 568-க்கு வாங்கினார். அந்த பட்டி பவுடரை தொழிலாளர்களை கொண்டு முகமது சபீக் தனது வீட்டின் வர்ணம் பூசும் வேலையின் ஒருபணியாக பூசியிருந்தார்.

ஆனால் அந்த பட்டி பவுடர் தரக்குறைவாக இருந்ததால், சிலவாரங்களிலேயே உரிந்துகொண்டு, சாதாரண சுண்ணாம்பு அடித்தாற்போல ஆகியது. இதனை ்தொடர்ந்து முகமது சபீக், விக்னேஸ் ஏஜென்சியின் உரிமையாளர் மற்றும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அல்டிரா டெக் சிமெண்டு நிறுவனத்தின் மேலாளருக்கு புகார் அளித்தார். ஆனால் அல்டிராடெக் சிமெண்டு நிறுவனம், இந்த பிரச்சினைக்கு தாங்கள் ஏதும் செய்யமுடியாது. ஏஜென்சி நிர்வாகத்திடம் முறையிட்டு தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

தீர்ப்பு

இதனால் மனஉளைச்சல் அடைந்த முகமது சபீக், தனது வக்கீல் ரஞ்சித்குமார் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் முகமது சபீக்குக்கு தரக்குறைவான பட்டிபவுடரை விற்பனை செய்து, அவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்காக ரூ.75 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் விக்னேஸ் ஏஜென்சி வழங்குமாறு நீதிமன்ற நீதிபதி ஜவஹர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் உத்திரவிட்டு தீர்ப்பு அளித்தனர். தரக்குறைவான பட்டி பவுடரை வழங்கிய விக்னேஸ் ஏஜென்சி மீது எடுக்க அல்டிரா டெக் சிமெண்டு நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story