நிலக்கரி ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது


நிலக்கரி ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது
x

தோகைமலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததால் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

லாரி கவிழ்ந்தது

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கரூர் மாவட்டம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு சிமெண்டு ஆலைக்கு நிலக்கரியை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை தோகைமலை அருகே உள்ள கீழவெளியூரை சேர்ந்த பீட்டர் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த லாரி நேற்று காலை தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் பால் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் மோதி கவிழ்ந்தது.

டிரைவர் படுகாயம்

இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பீட்டர் பலத்த காயம் அடைந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் பீட்டரை மீட்டு சிகிச்சைக்காக தோகைமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கவிழ்ந்த லாரியை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் தோகைமலை-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கருப்பு கோவிலில் இருந்து பாளையம் ரோடு செக்போஸ்ட் வரை இந்த வளைவில் ஒரு வேகத்தடை கூட இல்லை. இதனால் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதேபோல் அடிக்கடி இப்பகுதியில் பலர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Related Tags :
Next Story