முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகம் 16-ம் தேதி வெளியீடு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகம் 16-ம் தேதி வெளியீடு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 40/40 தென் திசையின் தீர்ப்பு புத்தகம் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.

சென்னை,

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடந்த போர்தான் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். "400 இடங்களை கைப்பற்றுவோம்"எனச் சொன்ன பாஜகவை தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியது இந்தியா கூட்டணி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்த பிரதமர் மோடியை, அண்ணல் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசன சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறது திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி.

தமிழ்நாடு புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்கிற வரலாற்று வெற்றியை திமுக கூட்டணி பெற்றது. அந்த சரித்திர சாதனையை ஆவணமாக பதிவு செய்கிறது முதல்-மைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய "40/40 தென் திசையின் தீர்ப்பு புத்தகம்" இந்நூலினை சென்னை கலைஞர் அரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., பெற்றுக் கொள்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை திமுக கூட்டணி எப்படிச் சாத்தியமாக்கியது?, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம், 2023-ல் இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏவில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டங்கள், திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்கம், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடந்த தொகுதிப் பங்கீடு, திமுக தேர்தல் அறிக்கை, கழக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள், பல்வேறு ஊடகங்களுக்கு முதலமைச்சர் அளித்த சிறப்புப் பேட்டிகள், திமுகவின் தேர்தல் விளம்பரங்கள், 40/40 வெற்றியை தந்த தேர்தல் முடிவுகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளிவிவரங்கள், ஏராளமான படங்கள், இன்போகிராபிக் என விரிவாகப் பதிவு செய்திருக்கிறது 'தென் திசையின் தீர்ப்பு' நூல். 40/40 வரலாற்றுச் சாதனை போல இந்த புத்தகமும் ஓர் வரலாற்றுத் தேர்தல் ஆவணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story