7.5 சதவீத இட ஒதுக்கீடு: பல மருத்துவர்களை உருவாக்கும் நல்வாய்ப்பு கிடைத்ததற்கு அ.தி.மு.க. பெருமை கொள்கிறது - எடப்பாடி பழனிசாமி


7.5 சதவீத இட ஒதுக்கீடு: பல மருத்துவர்களை உருவாக்கும் நல்வாய்ப்பு கிடைத்ததற்கு அ.தி.மு.க. பெருமை கொள்கிறது - எடப்பாடி பழனிசாமி
x

கோப்புப்படம் 

இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கனவு நனவாகியுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 2020-ல் 435 பேர், 2021-ல் 555 பேர், 2022-ல் 584 பேர், 2023-ல் 625 பேர் என ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கனவு நனவான அரசுப்பள்ளி மாணவ மாணவியரின் இன்முகங்களைக் காண்பதில் எப்போதும் எனக்குப் பெருமகிழ்ச்சி. அதே போல, இந்த ஆண்டும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மகத்துவத்தைப் பறைசாற்றும் பேட்டிகளையும் கண்டு களிப்புற்றேன்.

அவர்களின் பெற்றோர்களைப் போன்றே எனக்கும் நெகிழ்வான தருணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. அ.தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கனவு நனவாகியுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். உங்களைப் போன்ற பல மருத்துவர்களை உருவாக்கும் நல்வாய்ப்பு கிடைத்ததற்கு அ.தி.மு.க. பெருமை கொள்கிறது.

ஏழை எளிய மாணவர்களுக்காக இன்னும் பல நலத்திட்டங்கள் தர அயராது பொதுத்தளத்தில் உழைப்பதற்கான உத்வேகத்தை உங்களுடைய சாதனைகள் எனக்குத் தருகிறது. நீங்கள் அனைவரும் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக கோலோச்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு மகத்தான மருத்துவ சேவையினை அளிக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story