பெரம்பலூரில் 71.44 சதவீதம் வாக்குப்பதிவு: உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது


பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 71.44 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

71.44 சதவீத வாக்குகள் பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா 2 பேரும் என மொத்தம் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 11 வாக்குச்சாவடிகளில் நடந்தது. இதில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 5,505 வாக்காளர்களில், 1,765 ஆண் வாக்காளர்களும், 2,168 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 3,933 பேர் வாக்களித்தனர். இது 71.44 சதவீதம் ஆகும்.

வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு தலா 3 பேர் என பெரம்பலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 9 அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

வேட்பாளர்கள்-முகவர்களுக்கு மட்டுமே அனுமதி

வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதிவான வாக்குகள் 9 சுற்றுக்களாகவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரு சுற்றாகவும் எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும் என்று அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story