தாயை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை


தாயை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
x

தாயை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

தகராறு

அரியலூர் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர்கள் தங்கள் மகன்கள் கார்த்திகேயன், மாதவன், மகள் மகாலட்சுமி மற்றும் ரவிச்சந்திரனின் தாய் சரஸ்வதி அம்மாள்(70) ஆகியோருடன் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இதனால் ரவிச்சந்திரனின் மனைவி தாமரைச்செல்வி தனது குழந்தைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வந்தார். மேலும் சரஸ்வதி அம்மாள் ஆதனூரில் உள்ள தனது மூத்த மகன் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார்.

7 ஆண்டுகள் சிறை

இந்நிலையில் கடந்த 13.3.2022-ந் தேதி வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன், தனது தாய் சரஸ்வதி அம்மாளை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் அரிவாளால் வெட்ட முயன்றார். அவர்கள் வீட்டை விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து தாமரைச்செல்வி கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து, சிறையில் நடத்தினர்.

இந்த வழக்கானது அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் ேநற்று தீர்ப்பு கூறினார். இதில் ரவிச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ரவிச்சந்திரனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story