நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 7 அகதிகள்


நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 7 அகதிகள்
x

இலங்கையில் இருந்து வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 7 அகதிகளை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

இலங்கையில் இருந்து வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 7 அகதிகளை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

அகதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், உணவுகள் கிடைக்காமலும் அவதி அடைந்து வருகின்றனர்.இதனால் இதுவரையிலும் இலங்கையிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இவ்வாறு வந்த அகதிகள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு பிளாஸ்டிக் படகு ஒன்றில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த 2 குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண், 2 பெண்கள், 4 குழந்தைகள் என 7 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இவ்வாறு வந்து அகதிகளை தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் படகோட்டிகள் இறக்கிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பலில் 3-வது மணல் திட்டு பகுதிக்கு விரைந்து சென்று மணல் திட்டில் தவித்த 7 அகதிகளையும் கப்பலில் ஏற்றி அவர்களுக்கு பிஸ்ெகட், பிரட், கூல்டிரிங்ஸ் கொடுத்தனர். பின்னர் கப்பலில் ஏற்றி அரிச்சல்முனை கடற்கரை அழைத்து வந்து ராமேசுவரம் கடலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 7 அகதிகளிடம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசாரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ முடியாத நிலை

விசாரணையில் இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த மகேசன் (வயது 39), இவரது மனைவி தேவி(38) மற்றும் குழந்தைகள் தினாஷ்(10), ஹபிஷன்(6). இதேபோல் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த மேரி அகஸ்டா (44) மற்றும் மகன்கள் நிசார் கான் ஆகாஷ்(16), கெவின்(12) என மொத்தம் 7 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இதில் தேவி கூறியதாவது, இலங்கையில் மக்கள் வாழவே முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, மண்எண்ணெய் உள்ளிட்ட எந்த ஒரு பொருட்களும் கிடைப்பதில்லை. வசதி படைத்தவர்கள் மட்டுமே தான் தற்போதுள்ள நிலைமைக்கு இலங்கையில் வாழ முடியும். வேலை வாய்ப்புகள் எதுவும் கிடையாது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்து விட்டது. அரிசி ஒரு கிலோ ரூ.400, குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒரு டப்பா ரூ.1400, கோதுமை ஒரு கிலோ ரூ.300, பிஸ்ெகட் பாக்கெட் ரூ.100, பருப்பு ரூ.300 என அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. ஏராளமான மக்கள் சாப்பாடு கிடைக்காமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர் என்றார்.


Next Story