மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர் உள்பட 7 பதவிகள்: ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது


புதுக்கோட்டையில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர் உள்பட 7 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. 119 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை

வாக்குச்சாவடி மையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு, தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி, நெடுங்குடி, மேலப்பட்டு, வெட்டுக்காடு ஆகிய ஊராட்சி மன்ற தலைவர், செங்கீரை ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவிற்காக மொத்தம் 119 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 54 ஆயிரத்து 777 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் களத்தில் 7 பதவிகளுக்கு 20 பேர் போட்டியிடுகின்றனர். 21 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெறும்.

ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு, தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவி வாக்குப்பதிவுக்கான ஓட்டுப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் நேற்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை தேர்தல் நடத்தும் அதிகாரி ரேவதி முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழ்செல்வி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஊராட்சி செயலாளர் லட்சுமி, மண்டல அலுவலர் கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், குமாரவேலன், நலத்தேவன், வெங்கடேசபிரபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பிரான்சிஸ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்து வாக்குப்பதிவுக்கான பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 ஓட்டுகள்

வாக்குப்பதிவையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு பதவிக்கான தேர்தல் நடைபெறும் பகுதியில் புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியங்களில் தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி ஆகிய ஊராட்சிகள் வருகிறது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மேற்கண்ட இந்த ஊராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் தலா 2 வாக்குகள் பதிவு செய்வார்கள். அதாவது மாவட்ட கவுன்சிலர் வேட்பாளருக்கும், ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளருக்கும் என தனித்தனியாக தலா ஒன்று வீதம் 2 ஓட்டுகள் பதிவிடுவார்கள். ஒரே ஓட்டுப்பெட்டியில் இந்த வாக்குச்சீட்டினை வாக்காளர்கள் செலுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சீட்டுகள் தனியாக பிரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story