குமரியில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு


குமரியில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

குமரியில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 420 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் நாகர்கோவில் மாநகரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலசூரங்குடி பகுதியில் ஒரே வீட்டில் 2 பெண்களும், அதே பகுதியில் மேலும் ஒரு பெண்ணும், சின்னவண்ணான்விளை பகுதியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாகர்கோவில் நகரில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதேசமயம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் ஒருவருக்கும், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தையொட்டியுள்ள கேரளாவில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எல்லை பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருபவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story