7 தலைமுறை குடும்பத்தினர் சந்திப்பு
நாமக்கல்லில் 7 தலைமுறை குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
இன்றைய சூழலில் உறவினர்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் முந்தைய தலைமுறையே முழுமையாக தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், வளரும் தலைமுறைக்கு நமது கலாசாரம், பண்பாடு, குடும்ப உறவுகள், சொந்தங்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நாமக்கல்லை சேர்ந்த பழனிகவுண்டர் பரம்பரையில் வந்த 7 தலைமுறையினர் சங்கமித்த குடும்ப இணைப்பு விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது.
இதில் 7 தலைமுறையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட சொந்தங்கள் வருகை தந்து, ஒருவருக்கொருவர் கலந்துரையாடி மகிழ்ந்தனர். விழாவில் 60 முதல் 90 வயது வரை உள்ள மூத்த தலைமுறை சொந்தங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். மேலும் 7 தலைமுறை சொந்தங்களின் உறவுமுறை குறித்த விளக்க புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 7 தலைமுறையினரை வாழ்த்தினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை லாரி உரிமையாளர்கள் கணேசன், நடராஜன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.