இலுப்பூர் அருகே ஜல்லிக்கட்டில் 655 காளைகள் சீறிப்பாய்ந்தன


இலுப்பூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 655 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டி 17 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை நடைபெற்றது. முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 165 மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை, கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 655 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வீரர்களை பந்தாடிய காளைகள்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பிரகாஷ் (வயது 21), அஜீத்குமார் (23), யோகராஜ் (34), பால்ராஜ் (30), முத்துபாண்டி (24), கருப்பையா (63) உள்பட 17 பேர் காயமடைந்தனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த ராஜ்குமார் (28), சக்திவேல் (25), சுரேஷ் (27) ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பரிசுகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, குக்கர், ஹாட் பாக்ஸ், அயன் பாக்ஸ், சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story