புதுக்கோட்டையில் 64,729 பேர் பொதுத்தேர்வுகளை எழுதுகிறார்கள்


புதுக்கோட்டையில் 64,729 பேர் பொதுத்தேர்வுகளை எழுதுகிறார்கள்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் 64,729 பேர் பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர்.

புதுக்கோட்டை

பொதுத்தேர்வுகள்

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 5-ந் தேதியும் நிறைவடைகிறது. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) செல்வி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்வு மையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 21,031 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 18,617 மாணவ-மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25,081 மாணவர்களும் எழுத உள்ளனர். இதற்காக மேல்நிலை வகுப்பிற்கு 97 தேர்வு மையங்களும், 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 25 வழித்தடங்களும், தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு 128 தேர்வு மையங்களும், 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 25 வழித்தடங்களும், 2 விடைத்தாள் மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தடையில்லா மின்சாரம்

தேர்வு நாளன்று ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்களுக்கு குடிநீர்வசதி மற்றும் சுகாதார வசதிகள் உரிய முறையில் செய்திடவும், அனைத்து தேர்வு மையங்கள் அமைந்துள்ள வழித்தடங்களில் தேர்வு நாளன்று பஸ்கள் தடையில்லாமல் இயக்கிடவும், கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து முன்னேற்பாட்டு வசதிகள் செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை மொத்தம் 64,729 பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story